பெய்ஜிங்: திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவின் இந்த திட்டம் இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பிரம்மபுத்திரா நதி அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக வங்கதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இது உலகின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். திபெத்தியப் பகுதியைக் கட்டுப்படுத்தும் சீனா, பிரம்மபுத்திரா நீரை வறண்ட பகுதிகளுக்குத் திருப்புவதற்கான திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. முன்னதாக, பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட சீனா திட்டமிட்டிருந்தது. இதன் மூலம், உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்தது.
இதையடுத்து, திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திரா நதியில் இந்தியா அணை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை செயல்படுத்த 137 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இந்த முடிவு பிரம்மபுத்திரா நதியை நம்பி வாழும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய அணை கட்டுவதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பையும், நீர் ஆதாரத்தையும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இந்தியா, வங்கதேசம் போன்ற பிரம்மபுத்திரா நதி பாயும் நாடுகளுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தும்போது, அது சர்வதேச பிரச்னையாக மாறலாம். பிரம்மபுத்திரா நதி நீரை நம்பி வாழும் நாடுகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய அரசு ஏற்கனவே சீன அரசிடம் பலமுறை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது சீனா இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 2015-ம் ஆண்டு முதல், சீனா 15 பில்லியன் டாலர் செலவில் திபெத்தில் ஜாங்மு நீர்மின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தவிர டாகு, ஜியெக்ஸ், ஜியாச்சா ஆகிய பகுதிகளிலும் அணைகளை கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.