கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
டிசம்பர் மாதம் தொடங்கும் போதே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இதேபோல் ரோமன் கத்தோலிக்க தலைவர் போப்பின் இருப்பிடமான வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 29 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் எரியூட்டப்பட்டது. இத்தாலிய அரச அதிகாரிகள் மற்றும் பேராயர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மேலும், புனித பேதுரு பேராலயத்தில் கர்தினால்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், கேரள மாநிலம் செங்கனாச்சேரியைச் சேர்ந்த மான்சிஞர் ஜார்ஜ் ஜேக்கப் கோவக்காட் உட்பட 21 பேர் புதிய கர்தினால்களாக பதவியேற்றனர்.
பொதுவாக கிறிஸ்துமஸ் காலத்தில், கிறிஸ்து பிறப்பின் மகிமையை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் இந்த வகையான நிகழ்வுகள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன.