வாஷிங்டனில் அமெரிக்க அரசின் வரி குறைப்பு மற்றும் கடன் உச்சவரம்பை அதிகரிக்குவதற்காக உருவாக்கப்பட்ட ‘பெரிய அழகான வரி’ என்ற மசோதா, காங்கிரசில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மசோதாவை முன்வைத்தார். அதன் முதல் வரைவு மே மாதம் வெளியானது. இதில் தனிநபர் மற்றும் நிறுவன வரிகளை குறைக்கும் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அமெரிக்க அரசிற்கு 33 லட்சம் கோடி ரூபாயிற்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டது.

இந்த மசோதா தற்போது 4.5 டிரில்லியன் டாலர் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 218 உறுப்பினர்களில் 214 பேர் ஆதரவு தெரிவித்தனர். தற்போது இந்த மசோதா, அதிபர் டிரம்ப்பின் கையெழுத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அறிவித்துள்ளபடி, இன்று மாலை 5 மணிக்கு டிரம்ப் இதற்கு கையெழுத்திட உள்ளார். இது சட்டமாகும் போது, அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
அதிபர் டிரம்ப் இதை ‘வரலாற்று சிறப்புமிக்க வெற்றி’ எனக் கூறியுள்ளார். “இந்த மசோதா அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ராக்கெட் வேகத்தை தரும். வரி குறைப்பு, எல்லை பாதுகாப்பு ஆகியவை இதில் முழுமையாக அடங்கியுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவால் அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் கட்டண வரி 5% இலிருந்து 1% ஆக குறைக்கப்படுகிறது. இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நன்மை அளிக்கிறது. ஆண்டுக்கு 2.68 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பும் அமெரிக்க இந்தியர்களுக்கு, இம்மாற்றம் ஒரு நிம்மதியான வளர்ச்சி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.