ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசைச் சுற்றி மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்பே கசிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆண்டு நோபல் அமைதிப் பரிசை யாருக்கு வழங்கப்போகிறார்கள் என்ற கேள்வி உலகளவில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழு போர்களை நிறுத்தியதாகக் கூறி, “அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு தரப்படாவிட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானம்” என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஆனால் பரிசு வெனிசுலா நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

மரியா கொரினா தேர்வானதை டிரம்ப் ஏற்றுக்கொண்டாலும், அவர் அந்த பரிசை டிரம்புக்கே அர்ப்பணிப்பதாக கூறியதால் விவாதம் மேலும் தீவிரமானது. இதன் பின்னர் நோபல் குழுவுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வு செய்யப்பட்டவரின் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆன்லைன் கணிப்பு தளமான ‘பாலிமார்க்கெட்’-இல் மரியா கொரினாவின் பெயர் திடீரென 73 சதவீத ஆதரவைப் பெற்றது. இதனால் நோபல் அமைப்பு உள்ளார்ந்த தகவல் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது.
நோபல் நிறுவனத்தின் இயக்குநர் கிரிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென், “தகவல் கசிவு உளவு நடவடிக்கையாக இருக்கக்கூடும். விசாரணை நடத்தப்படும், அவசியமெனில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். மேலும், “இத்தகைய தகவல் கசிவு நோபல் நிறுவனத்தைப் பற்றிய நம்பிக்கையை பாதிக்கக்கூடும். எதிர்காலத்தில் உளவுத்துறை தலையீட்டைத் தடுக்க கடுமையான நடைமுறைகள் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் நவல்னியின் மனைவி யுலியா நவல்னயா பரிசுக்கு முன்னிலையில் இருப்பார் என்று பல கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக மரியா கொரினா பெயர் வெளிவந்தது அரசியல் பின்னணியுடன் கூடிய கசிவாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் மதிப்பிடுகின்றன. இச்சம்பவம் நோபல் அமைதிப் பரிசின் நம்பகத்தன்மை மீதான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.