வாஷிங்டன்: அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, கடந்த 20-ம் தேதி திங்கட்கிழமை அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உடனடியாக பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், “பிறந்த உரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, பெற்றோரில் ஒருவர், அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் மட்டுமே, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். 30 நாட்களில், இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. குழந்தைகள் என்பதால், அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவின் ‘அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள்’ அல்ல, குடியுரிமைச் சட்டத்தின் 14-வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு உத்தரவாதம் அவர்களுக்குப் பொருந்தாது,” உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சியாட்டில் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜான் கோக்னர், ‘‘டிரம்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதனால் டிரம்பின் உத்தரவை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் தடை விதிக்கப்பட்டது குறித்து டிரம்ப்பிடம் தெரிவிக்கப்பட்டபோது, ’நிச்சயமாக மேல்முறையீடு செய்வோம்’ என அவர் கூறியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான இந்தியர்கள் ஹெச்-1பி விசாவில் அமெரிக்கா சென்று அங்குள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதால், டிரம்பின் உத்தரவு அவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வேலை விசா அல்லது சுற்றுலா விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி இயற்கை குடியுரிமை வழங்கப்படாது என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை தற்காலிக விசாவில் வேலைக்கு அமர்த்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களையும் இது பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த விவாதம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிரம்ப்பின் உத்தரவுக்கு இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்க குடியுரிமை ரத்து ஒரு மாதத்தில் அமலுக்கு வரவுள்ளதால், நிறைமாத கர்ப்பிணிகள் பலர் அதற்கு முன்னதாகவே சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பதால், அதை சட்டப்பூர்வமாக எப்படி செய்வது என்று கர்ப்பிணிகளும் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.