பீஜிங்: சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை அமைச்சரான டாங் ரென்ஜி யான், தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து ரூ.337 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
2007 முதல் 2024 வரை பல்வேறு பதவிகளில் இருந்தபோது அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெரும் அளவில் சட்டவிரோத சொத்துக்கள் குவித்ததாக விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், விசாரணைக்கு ஒத்துழைத்ததற்காக இந்த தண்டனையை உடனடியாக நிறைவேற்றாமல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2012இல் பதவியேற்ற பின், ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் அமைச்சர்கள் மட்டுமின்றி உயர் ராணுவ அதிகாரிகளும் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.