டெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் போரில் கொல்லப்பட்டதை அடுத்து, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார்.
“ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இந்தியர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டுள்ளது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இறந்தவரின் உடலை விரைவில் கொண்டு வர ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
சிகிச்சையில் உள்ள காயமடைந்த நபரை இந்தியாவுக்கு அனுப்புமாறும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். “மேலும், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு ரஷ்யாவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதை ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X-Site பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.