அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பாதிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவானது எனவும், அதனுடன் சேர்ந்த நாடுகள் டாலருக்கு சவால் விடும் பாங்கில் செயல்படுவதால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அதிரடி கருத்துகளை வெளியிட்டார்.

பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை தகர்க்க முயல்கின்றன என அவர் குற்றம் சாட்டியுள்ளார். “டாலர் தான் உலகத்தின் ராஜா. அதை நாங்கள் பாதுகாப்போம். அதற்கெதிராக யாரும் வர விரும்பினால், அவர்கள் அதன் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். என் கணிப்பில், அந்த விலையை யாரும் கொடுக்கத் தயாராக இல்லை,” எனத் டிரம்ப் கூறினார்.
மேலும், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் மாறுபட்ட நோக்கங்களுடன் செயல்படுவதால் அது ஒன்றுபட்ட அமைப்பாக இல்லையென்றும், அது மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். “உங்களிடம் புத்திசாலி தலைவர் இருந்தால், உலக தரத்தை இழக்கமாட்டீர்கள். ஆனால் முந்தையதுபோன்ற முட்டாள் ஒருவர் இருந்தால், அது பெரிய இழப்பை ஏற்படுத்தும்,” என்றும் அவர் விமர்சித்தார்.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்கா 10 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளது என்றும், அந்த தேதியில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்றும் டிரம்ப் உறுதியாக தெரிவித்துள்ளார். அவர் கூறிய இந்த கருத்துகள், டாலரின் நீடித்த ஆதிக்கத்தை கட்டுப்படுத்த விரும்பும் நாடுகளுக்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.