வாஷிங்டன்: “பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆற்றலை சவாலாகக் கருதி அதை குறைக்கும் நோக்கில் செயல்படுகிறது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் வலியுறுத்திய கருத்துகள் சர்வதேச வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்றும், இந்த அமைப்பு வளர்ந்து வரும் நாடுகளுக்கான பொருளாதார அமைப்பாக இருந்தாலும், டாலரை மாற்ற முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்தார். “அவர்கள் விரைவில் அழியப்போகிறார்கள்” என கடுமையாக விமர்சித்த அவர், பொருளாதார ஒற்றுமையற்ற அமைப்பாக பிரிக்ஸை விவரித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணு ஆயுத மோதலையும் அவர் எடுத்துக்காட்டினார். “இரு நாடுகளும் மிகவும் பதட்டமாக இருந்தபோது, வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் அதை தணிக்க முடிந்தது. இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவின் வலிமையையும் பரிணாம உத்தியையும் நிரூபிக்கின்றன.” என அவர் கூறினார்.
அதே நேரத்தில், ஈரானின் அணுசக்தி முயற்சியை அமெரிக்கா முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் டிரம்ப் விளக்கினார். “அவர்கள் முற்றிலும் முடங்கிவிட்டனர். நாங்கள் நிறைய போர்களைத் தவிர்த்தோம், ஆனால் எங்களுடன் விளையாட முடியாது என்பதையும் உலகம் உணர வேண்டும்” என்றார்.
இந்தக் கருத்துக்கள், அமெரிக்கா-பிரிக்ஸ் நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளில் புதிய திருப்பங்களை உருவாக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.