அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தனது அரசு அதிகாரிகளின் பெயர்களை டிரம்ப் அறிவித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க அரசின் திறன் துறை தலைவராக தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை தேர்வு செய்துள்ளார். டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் எலோன் மஸ்க்கிற்கு முக்கிய பதவிகளை வழங்குவதாக டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், தனது அரசில் இருவரையும் முக்கியப் பங்கு வகிப்பதால், அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் திறமையான திறந்த அரசு உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டார். அவர் தனது அறிக்கையில், “இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் எனது நிர்வாகத்தில் பணியாற்ற மிகவும் பொருத்தமானவர்கள். அவர்களின் உதவியுடன், வீணான செலவினங்களைக் குறைத்து, ஆபத்தான பிரச்சனைகளில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற முடியும்.”
மேலும், “அவர்களின் பணி ஜூலை 4, 2026க்குள் நிறைவடையும். சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு விழாவில் திறமையான மற்றும் சமரசமற்ற அரசாங்கம் அமெரிக்காவிற்கு பரிசாக இருக்கும்” என்று டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, ”அமெரிக்காவிற்கு தற்போது தகுதியான, சமரசம் செய்யாத தலைவர் கிடைத்துள்ளார்” என்று வாழ்த்து தெரிவித்தார்.