வாஷிங்டன் நகரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வகையில், உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற புதிய அரசியல் கட்சியை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். இதுவரை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த மஸ்க், சமீபகால அரசியல் நிலைப்பாடுகள், குறிப்பாக ‘பெரிய அழகிய வரி’ மசோதா தொடர்பாக டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் மாறுபட்ட பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த கட்சி ஆரம்பிப்பது குறித்து கருத்து தெரிவித்த மஸ்க், “மூன்றில் இரண்டு பங்குதாரர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் அரசியலை மீண்டும் தாங்கள் வழிநடத்தும் ஒரு சூழலை எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் ‘அமெரிக்கா பார்ட்டி’ உருவாகியுள்ளது. இது உங்கள் சுதந்திரத்தை உங்களுக்கே திருப்பிக் கொடுக்கும் இயக்கமாகும்” என்றார்.
அவரது இந்த அரசியல் பிரவேசம் வெறும் பிரகடனமாக இல்லாமல், சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் அடிப்படையிலான வரி மாற்றங்களை எதிர்த்து, மக்களுக்கே அதிகாரம் மாற வேண்டும் என்பதையே மையமாகக் கொண்டிருக்கிறது மஸ்கின் புதிய கட்சி. இது வர்த்தக, தொழில்நுட்ப, சமூக சுதந்திரம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் எனத் தெரிகிறது.
‘அமெரிக்கா பார்ட்டி’ அரசியலில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பது ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்புடன் முறிந்த மஸ்கின் இந்த புதிய முயற்சி, எதிர்கால அமெரிக்க தேர்தலில் கணிசமான புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.