அமெரிக்கா: அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனையைத் தவிர்க்க மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும்” என அந்நாடு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, ’அமெரிக்கா அமெரிக்காவுக்கானது’ என்ற கொள்கையுடன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த குடியேற்றவாசிகளைக் கண்டுபிடித்து, அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சால்வடார் சிறைக்கும் அனுப்பப்பட்டும் வருகின்றனர். மறுபுறம் அமெரிக்க ட்ரம்ப் அரசு, தொடர்ந்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில், ”அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனையைத் தவிர்க்க மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும்” என அந்நாடு தெரிவித்துள்ளது. அப்படி பதிவு செய்யாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள்” என அது எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உதவியாளர் மற்றும் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், “அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால், அவர்கள் அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அது குற்றம். அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கைது, அபராதம், சிறைத் தண்டனை அல்லது நாடு கடத்தப்படுதல் ஆகிய தண்டனைகளை சந்திக்க வேண்டும். அவர்கள் ஒருபோதும் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஒழுங்கு விதிகளின்படி, விசா வைத்திருப்போர், கிரீன் கார்டு பெற்றவர்கள் மற்றும் வேலை செய்ய அனுமதி பெற்ற தனிநபர்கள் என எல்லோருமே சட்டப்பூர்வ அந்தஸ்து நிரூபிக்கப்படும் வகையில் எல்லா நேரங்களிலும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என புதிய விதி தெரிவிக்கின்றது. H-1B தொழிலாளர்கள் அல்லது சர்வதேச மாணவர்கள் போன்ற விசாக்களை வைத்திருக்கும் தனிநபர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைக் கொண்டவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதில் முகவரி மாற்றம் இருப்பின் உடனடி தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதேபோன்று 14 வயது நிறைவடையும் குழந்தைகளும் கட்டாயம் மறுபதிவு செய்து கொண்டு, கைவிரல் ரேகைகளை அவர்களுடைய பிறந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில்லா வெளிநாட்டினர், ஏப்ரல் 11ஆம் தேதிக்கு பின்னர் 30 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்வதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.