கடந்த இரண்டு ஆண்டுகளாக காசாவில் பாலஸ்தீனியர்கள் படும் துயரம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தினரை அழிக்க உறுதியாக செயல்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உத்தரவின் பேரில் தொடர் குண்டு வீச்சுகள் இடம்பெற்று வருகின்றன. அக்டோபர் 2023 முதல் செப்டம்பர் 2025 வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.65 லட்சம் பேர் படுகாயம் அடைந்து, பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்களிலிருந்து உயிர் தப்பிய மக்கள் தங்கள் வீடு, சொத்து அனைத்தையும் இழந்து அலைந்து திரிகின்றனர். அடிப்படை தேவைகளான உணவு, தண்ணீர், மருந்துகள் கூட இல்லாமல் பசி, பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். உலக நாடுகள் நிவாரணம் அனுப்ப முனைந்தாலும், இஸ்ரேலிய படைகள் அவற்றை தடுத்து நிறுத்தி வருவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினியால் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது.
காசா நகரம் உருக்குலைந்து, எரிபொருள் தட்டுப்பாடு மோசமடைந்துள்ளது. 7 மாதங்களாக ஐ.நா. நிவாரணம் செல்ல அனுமதி இல்லை. மக்கள் தங்குமிட வசதி இல்லாமல் நெருக்கடியில் வாழ்கின்றனர். வேலை வாய்ப்பு இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானமின்றி மக்கள் காசில்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கே கூட கூடாரம் அமைக்க 3,180 டாலர் (இந்திய மதிப்பில் ₹2.8 லட்சம்) தேவைப்படுகிறது. ஆனால் யாரிடமும் அந்த அளவு பணம் இல்லாததால் எதிர்காலம் குறித்து பெரும் அச்சம் நிலவுகிறது.
இந்த மனிதாபிமான நெருக்கடியை உலக நாடுகள் தீவிரமாக எடுத்துக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. காசா மக்களுக்கு அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்கள் வழங்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் அதிகரித்து வருகிறது.