கனடா அரசின் புதிய முடிவின் படி, இனி வெளிநாட்டில் பிறக்கும் அனைத்து தலைமுறை குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, கனடா குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாட்டில் குழந்தையை பெற்றால், அந்த குழந்தைக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த குழந்தை வளர்ந்து திருமணம் செய்து, மீண்டும் வெளிநாட்டில் குழந்தையை பெற்றால், இரண்டாவது தலைமுறையினர் கனடா குடியுரிமையை பெற முடியாத நிலை இருந்தது.

இந்தச் சூழ்நிலை தொடர்ந்த காலங்களாகவே விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட மக்களும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். 2023ல் ஒன்டாரியோ உயர் நீதிமன்றம், ஒருமுறை குடியுரிமை பெற்றவர் அவரின் வாரிசுகளுக்கு குடியுரிமை மறுப்பது தவறு என தீர்ப்பு வழங்கியது. இதன் பின்னணியில், கனடா அரசு இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த புதிய சி-3 மசோதையின் அடிப்படையில், கனடா குடியுரிமை பெற்றவர்கள் எங்கு குழந்தையை பெற்றாலும், அவர்களின் சந்ததியினருக்கு குடியுரிமை வழங்கப்படும். முக்கியமாக, குடியுரிமை பெறுவதற்கான அடிப்படை நிபந்தனையாக, குறைந்தது மூன்று ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையே நிபந்தனையாக நிறுவியுள்ளது.
இந்த மாற்றம் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு குடியுரிமை விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது கனடாவின் பழைய சட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்கும் ஒரு முக்கிய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. முன்னாள் சட்டத்தின் படி, ஒருவர் இந்தியாவில் குழந்தையை பெற்றால், அந்த முதல் தலைமுறைக்கு குடியுரிமை வழங்கப்பட்டாலும், அதன்பின் பிறக்கும் தலைமுறைக்கு இது கிடைக்காமல் இருந்தது.
உதாரணமாக, இந்தியாவைச் சேர்ந்த சீதா என்பவர் கனடா குடியுரிமை பெற்ற பிறகு இந்தியாவில் ராதா என்ற குழந்தையை பெற்றால், ராதாவுக்கு குடியுரிமை கிடைக்கும். ஆனால், ராதா வளர்ந்து ராதிகா என்ற குழந்தையை இந்தியாவில் பெற்றால், ராதிகாவுக்கு குடியுரிமை கிடைக்காது என்பதே பழைய சட்டம். இப்போதைய திருத்தம் இதனை முற்றிலும் மாற்றியுள்ளது.
கனடாவின் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்துடன், தற்போது போதுமான உழைப்புச் சக்தி இல்லாத நிலையை சரிசெய்யும் முயற்சியாகவும் இந்த சட்ட மாற்றம் விளக்கப்படுகிறது. இதை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யவில்லை என்பதுடன், மசோதாவை ஆளுங்கட்சி நேரடியாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த புதிய மசோதா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்தும் ஆதரவை பெற்றுள்ளது. அமெரிக்காவில் ஒருபோதும் நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளப்படாத இந்த வகை சட்ட மாற்றம், கனடா வழியாக நடைமுறைப்படுத்தப்படுவது பெரும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சி இந்திய வம்சாவளியினர் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, உலகளாவிய குடியுரிமை சட்டங்களில் ஒரு முக்கியமான மாற்றமாக இதை வரலாறு கூறும்.