ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா பிராந்தியத்தில், இன்று மட்டும் மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதையடுத்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அந்தப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கங்கள் முறையே 6.7, 5 மற்றும் 7.4 ரிக்டர் அளவில் பதிவானவை. இதில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பெட்ரோபாவ்லோஸ்க் நகரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வுகளால் கட்டடங்கள் உறைந்ததால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் ஓடி வந்து சாலைகளில் கூடியுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை காரணமாக, கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் அல்லது மிகுந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர்.
இந்நிலையில், நிலநடுக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுனாமியின் சாத்தியத்தைக் கண்காணிக்க புவியியல் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பு அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.