கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றம் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி கலைக்கப்பட்டது. இன்னும் 11 மாதங்கள் உள்ள நிலையில் புதிய அதிபர் அனுரகுமார திசாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 225 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர்கள் பலர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கடந்த மூன்று மாதங்களாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவி வகித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. 21 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜிதா ஹெராத் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சராகவும் ஹரிணி பொறுப்பேற்றுள்ளார்.