இந்திய விமானப்படையின் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற மிக்-21 போர் விமானங்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் வான் பாதுகாப்பை காக்கும் பணி செய்தன. சோவியத் யூனியனில் வடிவமைக்கப்பட்ட இந்த supersonic ஜெட்கள், 1963ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தன. அதிலிருந்து, பாகிஸ்தானுடன் நடந்த 1965 மற்றும் 1971 போர்கள், 1999 கார்கில் போர், 2019 பாலகோட் தாக்குதல் என பல முக்கிய தருணங்களில் இந்தியாவுக்கு வலு சேர்த்தன.

மிக்-21 தனது வேகம், சுறுசுறுப்பு மற்றும் சிறிய தளங்களில் இருந்து பறக்கும் திறனால் உலகின் கவனத்தை ஈர்த்தது. விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் 2019ல் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய நிகழ்வு, இந்த ஜெட்களின் திறமையை உலகுக்கு மீண்டும் எடுத்துக்காட்டியது. ஆனால், பழைய தொழில்நுட்பமும் உதிரிபாகங்களின் பற்றாக்குறையும் காரணமாக, மிக்-21 விமானங்கள் பல விபத்துகளுக்குக் காரணமானது. இதனால், “பறக்கும் சவப்பெட்டி” என்ற பெயரும் பெற்றது.
சுமார் 11,000க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் உலகளவில் தயாரிக்கப்பட்டன. அதில், இந்தியாவில் மட்டும் 657 விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் உள்நாட்டில் தயாரித்தது. நீண்ட கால சேவையின் பின்னர், சண்டிகரில் உள்ள விமானப்படை நிலையத்தில் “Panthers” படைப்பிரிவைச் சேர்ந்த கடைசி மிக்-21க்கும் இன்று அதிகாரப்பூர்வ ஓய்வு அளிக்கப்பட்டது. இது 1963ல் இந்திய விமானப்படையில் மிக்-21 சேர்க்கப்பட்ட அதே இடத்தில் நிகழ்ந்ததால் வரலாற்று சிறப்புப் பெற்றது.
இந்த பிரியாவிடை விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மிக்-21க்கு பதிலாக, தேஜஸ், சுகோய்-30, ரஃபேல் போன்ற நவீன போர் விமானங்கள் இந்திய வான்பாதுகாப்பில் முன்னணியில் நிற்கின்றன. மிக்-21 ஓய்வு பெற்றாலும், அதன் வீரத்தையும் பங்களிப்பையும் இந்தியா என்றும் நினைவுகூரும்.