பெய்ரூட்: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து லெபனானிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வரும் சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவர் நயூம் காசிம் திட்டவட்டமாக கூற்றுகளை வெளியிட்டுள்ளார். ஆயுதங்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்க லெபனானை கட்டாயப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகக் கூறிய அவர், இது அரசியல் பேச்சுவார்த்தைகளின் நோக்காக இருக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலியாகிய பின்னணியில், கடந்த ஆண்டு ஒரு போர் நிறுத்தம் இடைநிறுத்தமாக செயல்பட்டது. இருப்பினும், ஹிஸ்புல்லாவிடம் ஆயுதங்களை ஒப்படைக்க கோரி இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி நடவடிக்கைகளும் ஹிஸ்புல்லாவிடம் இருந்து இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலைமையில், ஹிஸ்புல்லா கமாண்டர் புவாட் ஷுக்ரியின் நினைவு நாளில் உரையாற்றிய துணைத் தலைவர் நயூம் காசிம், “ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்பவர்கள் இஸ்ரேலுக்கு சேவை செய்கிறார்கள். நாங்கள் அடிபணிய மாட்டோம். இஸ்ரேல் எங்களை தோற்கடிக்க முடியாது. லெபனானின் அரசியல் பேச்சுக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தும் நோக்கத்துடன் இருக்கவேண்டும்” எனக் கூறினார்.
இதேவேளை, அமெரிக்கா ஆயுத ஒப்படைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தீர்மானம் எடுக்க லெபனான் அரசாங்கத்திடம் அழுத்தம் தந்து வருகின்றது. ஆனால் ஹிஸ்புல்லாவின் இந்த உறுதியான பதிலில், எதிர்காலத்தில் மேலும் கடுமையான பதிலடி நடவடிக்கைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.