நியூயார்க்: ஓ.டி.டி. தளத்திற்கு சொந்தமான, ‘நெட்பிளிக்ஸ்’ தளத்துக்கான ஒரு வலைத்தொடர் தயாரிப்புக்காக, 95 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஹாலிவுட் இயக்குநர் கார்ல் ரின்ஷ், நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர் கார்ல் ரின்ஷ், கெனு ரீவ்ஸ் நடிப்பில் வெளியான “47 ரோனின்” திரைப்படத்தை இயக்கியவர். அந்த படம் வியாபார ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதின்பின், ரின்ஷ் பல விளம்பர படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், “நெட்பிளிக்ஸ்” ஓ.டி.டி. தளம், தனது வலைத்தொடர் தயாரிப்புக்காக கார்ல் ரின்ஷிடம் அணுகியது. ரின்ஷ் தன்னிடம் ஒரு அறிவியல் புனைக்கதை இருப்பதாக கூறி, தனது கதையை ‘ஒயிட் ஹார்ஸ்’ என்ற பெயரில் தயாரிக்க நெட்பிளிக்ஸ் முன்வந்தது. ஆரம்பத்தில், 380 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டது. ஆனால், படத்தை முழுமையாக முடிக்க கூடுதல் நிதி தேவை என்ற காரணத்தால், மேலும் 95 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
ஆனால், ரின்ஷ் அந்த கூடுதல் 95 கோடி ரூபாயை படத்தின் பணத்தை முடிக்க அல்ல, மாறாக தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியுள்ளார். இதில், அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து 48 கோடி ரூபாய் இழந்ததாகவும், அதன் பின்னர் கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சொகுசு வாழ்க்கையை வாழ்ந்த அவர், 16 கோடி ரூபாய்க்கு கிரெடிட் கார்டு பில்கள், 20 கோடி ரூபாய்க்கு ரோல்ஸ் ராய்ஸ் கார், 32 கோடி ரூபாய்க்கு ஆடம்பர பொருட்கள், 5.6 கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் என வாங்கி குவித்துள்ளார்.
இதனிடையே, நெட்பிளிக்ஸ் தளம் ரின்ஷின் மீது புகார் கொடுத்ததில், நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, குற்றச்சாட்டுகளை அவர் மறுத்ததாக கூறியுள்ளார். இந்த நிலையில், 86 லட்சம் ரூபாய் பிணைத்தொகையுடன் அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.