வாஷிங்டன்: எச்-1பி விசாவை எப்போதும் ஆதரிப்பதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 20-ம் தேதி பதவியேற்கவுள்ள டிரம்ப், நிர்வாகத்தில் முக்கிய பதவிகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறார். இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு ஆலோசகராக இந்தியரான ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்தார்.
இதனை விமர்சித்து டிரம்ப் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், டிரம்ப் ஆதரவாளர்களான எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அறிவு சார்ந்த தொழில்நுட்ப பணியாளர்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எச்-1பி விசாவில் அமெரிக்காவில் குடியேறிய மஸ்க், தனது எக்ஸ் இணையதளத்தில், ‘உங்கள் அணி வெற்றிபெற வேண்டுமானால், திறமையானவர்களை அணியில் சேர்க்க வேண்டும். அவர்கள் அமெரிக்காவிற்கு வந்து இந்த நாட்டிற்கு பங்களிக்க கடினமாக உழைத்திருந்தால், அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு.’
விவேக் ராமசாமி கூறுகையில், “பிரச்சினை குடியேற்றத்தில் இல்லை, அமெரிக்க கலாச்சாரத்தில் உள்ளது. அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாக வளர்க்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் குறைபாடுகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
தனது கட்சியின் இரு தரப்பினரும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சூழ்நிலையில், டிரம்ப் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து H-1B விசா முறையை உறுதிப்படுத்தினார். “எனக்கு எப்போதுமே விசாக்கள் தேவை, நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாகவே இருந்தேன். அதனால்தான் எங்களிடம் எச்-1பி விசாக்கள் உள்ளன,” என்று டிரம்ப் கூறினார்.
H-1B விசா திறமையான தொழிலாளர்கள் அமெரிக்காவிற்கு தற்காலிக அடிப்படையில் நுழைய அனுமதிக்கிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கலாம். அதிகபட்சம் 6 ஆண்டுகள்.