நியூயார்க்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட முடிவுற வாய்ப்பே இல்லாத பல்வேறு நாடுகளிடையேயான 8 போர்களை 10 மாதங்களில் முடித்துவைத்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறினார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்ததையொட்டி வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்தார். இதன்மூலம், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் நிறுத்தியதாக 90-ஆவது முறையாக ட்ரம்ப் கூறியுள்ளார். அவா் மேலும் கூறியதாவது:-
அதிபராகப் பதவியேற்ற 10 மாதங்களில், கம்போடியா – தாய்லாந்து இடையே பல ஆண்டுகளாக நிகழ்ந்துவந்த போர், கொசோவா- சொ்பியா போர், காங்கோ-ருவாண்டா இடையேயான போர்கள் என முடிவுற வாய்ப்பே இல்லாத 8 போர்களை நிறுத்தியுள்ளேன்.
இதில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் போரில் 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த இரு நாடுகளும் அணு ஆயுத சக்தி கொண்டவை. அந்த வகையில், இவா்களிடையேயான சண்டை அணு ஆயுதப் போராகவும் மாறியிருக்கும் என்பது எனது கருத்து.
இந்தச் சண்டையை நிறுத்தியதற்காக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்திருந்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் என்னை வெகுவாகப் பாராட்டினார். இந்தச் சண்டையை நிறுத்தியதன் மூலம் ஒரு கோடி மக்களின் உயிர்களை நான் (ட்ரம்ப்) காப்பாற்றியதாக அவா் புகழ்ந்தார் என்றார். அமைதிக்கான நோபல் பரிசை நீங்கள் வென்றிருந்தால், சாமானிய அமெரிக்கா்களின் அன்றாட வாழ்க்கை எந்த வகையில் மேம்பட்டிருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், ‘8 போர்களை நிறுத்தி, பல கோடி மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன்.
ஒவ்வொரு நாட்டிலும் பல கோடி மக்கள் வசிக்கின்றனா். அதை 8 மடங்காக கணக்கிடும்போது, போர் நிறுத்தம் மூலம் எத்தனை கோடி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பதை உணர முடியும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் தொடா்ந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு கோடி முதல் 2 கோடி வரை அதிகரிக்கவும் வாய்ப்பு இருந்தது. அந்த வகையில், பல கோடி மக்களின் உயிா்களைக் காப்பாற்றியுள்ளேன் என்பது மிகப் பெரிய விஷயம். நான் நிறுத்திய ஒவ்வொரு போருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும். ஆனால், அதை நான் வலியுறுத்தவில்லை’ என்றார்.