புதுடெல்லி: அண்டை நாடான மாலத்தீவுடன் இந்தியா சுமூகமான உறவை அனுபவித்து வருகிறது. எனினும், அங்கு அதிபராக பதவியேற்ற பிறகு, முகமது முய்சு சீனாவுடன் நெருக்கமாகிவிட்டார்.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் விமர்சித்துள்ளனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த பிரச்னைகளால், இந்தியா-மாலத்தீவு உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்றபோது, விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கலந்து கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தவறான புரிதலை போக்க, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதம் மாலத்தீவுக்கு சென்றார்.
தற்போது மாலத்தீவு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கொரோனா நெருக்கடிக்குப் பிறகு மாலத்தீவின் சுற்றுலா வருவாய் குறைந்துள்ளது. கடன் மதிப்பு 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, மாலத்தீவுக்கு இந்தியா 50 மில்லியன் டாலர் அவசர நிதியாக வழங்கியது. இந்நிலையில், இந்த நிதியுதவியை இந்த ஆண்டும் அரசு செலவினங்களுக்காக நீட்டிக்குமாறு மாலத்தீவு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஒரு வருடத்திற்கு இந்தியா நீட்டித்துள்ளது.