நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன இடையிலான மோதலுக்கு உடனடியாக நிரந்தர தீர்வு தேவை என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை இரு தனித் தனி நாடுகளாக பிரிப்பதுவே ஒரே தீர்வு எனவும், இந்தியா அதற்கே முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

மேற்காசிய பிரச்சனையாக கருதப்படும் இஸ்ரேல்–பாலஸ்தீன் விவகாரம் குறித்த உயர்மட்ட மாநாடு மூன்று நாட்கள் நீடித்தது. இந்த மாநாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் புறக்கணித்த நிலையில், பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் காசாவில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் ‘நியூயார்க் பிரகடனம்’ என்ற 25 பக்க அறிக்கையும் வெளியிடப்பட்டது.
அதில் ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர ஐ.நா. தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசும் போது, “இந்தியா இருநாட்டு தீர்வுக்கு உறுதுணையாக உள்ளது. ஆனால், மனிதாபிமான உதவிகளை தடை செய்யக்கூடாது. உணவு, எரிபொருள் போன்ற அடிப்படை தேவைகள் பாலஸ்தீனியர்களுக்கு சென்று சேர வேண்டும்” என்றார்.
இது வெறும் அரசியல் பேச்சாக இல்லாமல் நடைமுறையில் அமைய வேண்டும் என்றும், உலக நாடுகள் தங்கள் தூதரகங்களை வழிநடத்தி நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலையான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தப் பிரச்சனையில் அரசியல் நோக்கங்கள் இல்லாமல், மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.