நியூயார்க்: பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம், ஐக்கிய நாடுகள் சபையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை இந்தியா கடுமையாக சாடியது.

மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் தியாகி, “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா மீது தொடர்ந்து சுமத்தும் பாகிஸ்தான், தங்கள் சொந்த மக்களை குண்டுவீசி கொல்லும் அளவுக்கு மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும், “இந்தியாவின் பிரதேசங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான், அதை காலி செய்து, தங்கள் நாட்டின் பொருளாதார சீர்குலைவை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஐ.நா. தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் வழங்கிய பாகிஸ்தான், மறுபுறம் தங்கள் மக்களையே குண்டுவீசுகிறது என்பது உலக நாடுகள் முன் வெட்கக்கேடான செயல்” எனக் கூறினார்.
இந்தியாவின் இந்த பதில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான எதிர்ப்பாக மட்டுமல்லாமல், உலக மேடையில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தியது.