ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பிப்ரவரி 2022 முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் சந்தித்தார்.
இதையடுத்து, ரஷ்யாவில் கடந்த 22, 23-ம் தேதிகளில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ”ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் பிரச்னைக்கு, அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில், அனைத்து வழிகளிலும் உதவ, இந்தியா தயாராக உள்ளது,’ என, உறுதி அளித்தார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு மற்றும் 5-வது பெரிய பொருளாதாரம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நாடு சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர். அவர் உக்ரைனில் போரை நிறுத்த உதவ முடியும்.
இது தொடர்பாக இந்தியாவில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது. ரஷ்யா ஆக்ரோஷமாக செயல்படுகிறது. ரஷ்யாவின் அத்துமீறல்களால் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் பொருளாதாரத்தின் சரிவு போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். வேறு வழியின்றி போரை நிறுத்த வேண்டிய நிலைக்கு ரஷ்ய அதிபர் புடின் தள்ளப்படுவார். சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் உலகை இரு நாடுகளாக பிரிக்க புதின் தீவிர முயற்சி மேற்கொண்டார்.
அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கலந்து கொள்ளவில்லை. பிரிக்ஸ் அமைப்பில் சேர சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை பிரிக்ஸ் மாநாடு தோல்வியில் முடிந்தது.
சில நாடுகள் நடுநிலை வகிக்கின்றன. நடுநிலை என்றால் ரஷ்யாவை ஆதரிப்பது. உக்ரைனில் இருந்து 1,000 குழந்தைகள் ரஷ்ய ராணுவத்தால் பிடிக்கப்பட்டு தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை மீட்க பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும்.
உக்ரைனில் குளிர்காலம் தொடங்க உள்ளது. தற்போது, உக்ரைனில் உள்ள மின் நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. மின் நிலையங்களை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஐரோப்பிய நாடுகளால் மட்டுமே ரஷ்யாவை எதிர்க்க முடியும்.
இந்த கடினமான சூழ்நிலையில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த நாட்டின் புதிய அதிபர் உக்ரைனை ஆதரிப்பார் என்பதில் உறுதியாக உள்ளோம். அமெரிக்காவின் கொள்கை மாற்றம் உக்ரைனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால் உக்ரைனுக்கான ஆயுதம் மற்றும் நிதியுதவியை நிறுத்துவேன் என டிரம்ப் கூறி வருகிறார். இதன் காரணமாக உக்ரைனில் குழப்பமான சூழல் காணப்படுகின்றது.