வாஷிங்டன்: இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தது. இது இந்தியா-அமெரிக்க உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து பிரதமர் மோடியிடம் பலமுறை பேச முயன்றதாகவும், ஆனால் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் நெருக்கமான உரையாடலை நடத்தினர். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது. இந்த புகைப்படத்தை சமூக ஊடகமான Truth Social-ல் பகிர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், “நாம் இந்தியாவையும் ரஷ்யாவையும் தீய சீனாவிடம் இழந்துவிட்டோம்” என்று கூறினார்.

மாநாட்டிற்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பை நடத்தியது. இதில், சீன அதிபர் ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நெருக்கமாகப் பேசினார்.
இது குறித்து உடனடியாக கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், “சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கும் வேளையில், அதிபர் புதின் மற்றும் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.