புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு 33 டன் மருந்துகளை அனுப்பியுள்ளது.
டெல்லியில் இருந்து லெபனானுக்கு நேற்று மருந்துகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சண்டை நடந்து வருகிறது.
கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் ராணுவம் நேரடியாக லெபனான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. தற்போது இஸ்ரேல் எல்லையை ஒட்டிய லெபனான் பகுதிகளில் தரை வழியாக இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது.
லெபனானில் இரு தரப்பு போரில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் 33 டன் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “மனிதாபிமான அடிப்படையில் 33 டன் மருந்துகள் லெபனானுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பில் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.