புதுடெல்லி: அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் அதே அளவு வரி அந்தந்த நாடுகளுக்கும் விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, ஏப்ரல் 2-ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எதிராக இந்த பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இந்த பரஸ்பர வரி விதித்தால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 87 சதவீதம் பாதிக்கப்படும்.
இந்தியா மொத்தம் ரூ.5.75 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த பரஸ்பர கட்டணத்தை தவிர்க்க அமெரிக்காவுடன் இந்திய அரசு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பரஸ்பர வரி விதிப்பை தவிர்க்கும் வகையில், 55% அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை 5% முதல் 30% வரை குறைக்க இந்தியா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இதற்கான ஒப்பந்தம் இதுவரை எட்டப்படவில்லை. அதேநேரம், இந்திய அதிகாரிகள் வேறு வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.