ஆஸ்திரேலியாவில், இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாக குற்றம் சாட்டி ‘மார்ச் பார் ஆஸ்திரேலியா’ என்ற அமைப்பினர் பல நகரங்களில் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தினர். பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆட்சியில் இருக்கும் தொழிலாளர் கட்சிக்கு எதிராக வெளிநாட்டு குடியேற்றத்தை குறைக்கும் கோரிக்கையுடன் இந்த இயக்கம் குரல் கொடுத்தது. குறிப்பாக, இந்தியர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவதாகக் கூறி அவர்கள் சத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் தேசியக் கொடிகளை ஏந்தியபடி பேரணி நடத்தினர். கான்பெராவில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தினர். சிட்னியில் நடந்த பேரணியில் சுமார் 7,000 பேர் பங்கேற்று குடியேற்ற எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
மெல்போர்னில் பிளிண்டர்ஸ் தெரு அருகே நடைபெற்ற பேரணியில், போராட்டக்காரர்கள் மாநில செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு போலீசார் உடனடியாக தலையிட்டு அவர்களை தடுப்பதில் வெற்றி பெற்றனர். இதேபோல், பல நகரங்களில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த நிகழ்வுகளை கடுமையாக கண்டித்த ஆஸ்திரேலியா அரசு, இவ்வாறான நடவடிக்கைகள் வெறுப்புணர்வை பரப்புவதாகவும், சமூக ஒற்றுமையை பாதிக்கக்கூடியதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியர்களின் பங்களிப்பு அந்நாட்டின் தொழில்துறை மற்றும் கல்வித் துறைகளில் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், குடியேற்றம் குறித்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக ரீதியாக சிக்கலான பிரச்சினையாக மாறியுள்ளது.