ஒன்டாரியோ: இந்திய மாணவர்கள் கனடா கல்லூரிகளில் சேரும் எண்ணிக்கை மிகக் குறைந்ததால், அந்த நாட்டின் கல்வி அமைப்புகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன. இதனால், ஒன்டாரியோ உள்ளிட்ட பகுதிகளில் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தற்போது 10,000க்கும் மேற்பட்டோர் வேலையை இழந்துள்ளனர்.

காலிஸ்தான் தொடர்பான விவகாரம் இந்தியா-கனடா உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக, கனடா அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா அனுமதியை கடுமையாக கட்டுப்படுத்த தொடங்கியது. குறிப்பாக இந்திய மாணவர்கள் மேல் கல்விக்காக கனடாவை பெரிதும் சார்ந்த நிலையில், இக்கட்டுப்பாடுகள் அவர்களின் சேர்க்கையை பெரிதும் பாதித்துள்ளன.
ஒன்டாரியோவில் பல கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தாண்டு ஏற்பட்ட சேர்க்கை குறைவு காரணமாக கல்வி நிறுவனங்கள் துறை எடுப்புக்களை சுருக்க, வேலைவாய்ப்புகளை வெகுவாக குறைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
நிதி தட்டுப்பாட்டால் நிர்வாகங்கள் அரசிடம் அவசர நிதி உதவிக்காக கோரிக்கை விடுத்தும், எந்தவிதமான முடிவும் கிடைக்கவில்லை. இதனால், இன்னும் பலர் வேலையை இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக, ஒன்டாரியோ அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எச்சரித்துள்ளார். கனடா கல்வி அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.