அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தெலுங்கானாவை சேர்ந்த 30 வயதான முகமது நிஜாமுதீன் என்ற தொழில்நுட்ப வல்லுநர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறைத் தோழருடன் ஏற்பட்ட சிறிய தகராறின் பின்னர் போலீசார் தலையிட்டு சுட்டதில் இளைஞர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஜாமுதீன் 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா கல்லூரியில் உயர் கல்விக்காகச் சென்றார். படிப்பை முடித்த பின் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, பின்னர் பதவி உயர்வின் காரணமாக கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே ஏற்பட்ட சிறிய கைகலப்பே இவ்வளவு பெரிய துயர சம்பவமாக மாறிவிட்டது.
இவரின் தந்தை ஹஸ்னுதீன், தனது மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார். இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். உடல் தற்போது கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பதாகவும், இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உண்மையான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பெற்றோர் கூறுவதுபோல் சின்ன விஷயத்திற்காக போலீசார் நேரடியாக சுட்டது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான பாதுகாப்பு பிரச்னை மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குடும்பத்துக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.