புதுடெல்லி: கனடாவில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்காக இந்திய இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு உணவகம், பணியாளர்கள் மற்றும் சர்வர்களுக்காக விளம்பரம் செய்தது. இதையடுத்து, அந்த வேலைக்காக 3,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேன்டீன் முன் திரண்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்திய இளைஞர்கள் என்று கூறப்படுகிறது. வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று கனவு காணும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது
. இந்நிலையில், கனடாவில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை கிடைப்பதற்காக இந்திய இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இணையத்தில் பல விவாதங்கள் நடந்தன. “கனடாவில் வேலையின்மை மோசமாகி வருவதை இது காட்டுகிறது. வேலைவாய்ப்புக்காக கனடா செல்லும் இந்திய இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சிலர் இந்தக் கருத்தை மறுத்துள்ளனர். ”வெளிநாட்டில் படிக்கும் இளைஞர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக, கேன்டீன்களில் பகுதி நேரமாக வேலை பார்ப்பது வழக்கம்,” என்றனர்.
மறுபுறம், “இளைஞர்கள் பகுதி நேர வேலைக்குச் செல்வது பொதுவானது என்றாலும், இவ்வளவு இளைஞர்கள் உணவு விடுதிகளில் வேலை செய்வது வழக்கம் அல்ல. கனடாவில் வேலை வாய்ப்பு சூழல் மாறி வருவதை இது காட்டுகிறது.
கனடாவில் வேலை கிடைப்பதில் இந்திய இளைஞர்கள் சிரமப்படுகின்றனர் என்பது உண்மைதான்” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.