வாஷிங்டன்: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்துள்ள செர்ஜியோ கோர், “இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் உள்ள நடுத்தர வர்க்கம், அமெரிக்க சந்தைக்கான மிகப்பெரிய வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20ல் டிரம்ப் பதவியேற்ற பின், முன்னாள் தூதர் எரிக் கார்செட்டி விலகினார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது 50% இறக்குமதி வரி விதிப்பு காரணமாக இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் மற்றும் பிரசார நிதி திரட்டியவரான செர்ஜியோ கோர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க பார்லிமென்ட் வெளியுறவு குழு முன் ஆஜராகிய செர்ஜியோ கோர், “டிரம்ப்–மோடி நட்பு தனித்துவமானது. இந்தியா அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் மட்டும் அமெரிக்க மக்கள்தொகையை விட அதிகம். இது நமக்கான சந்தை விரிவாக்கத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு,” எனக் கூறினார்.
மேலும், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “இந்தியாவே 21ஆம் நூற்றாண்டில் உலக அரசியலின் மையப்புள்ளியாக உள்ளது. அமெரிக்கா–இந்தியா இடையேயான பிரச்னைகளை பேசி தீர்க்கும் திறமை கொண்டவர் செர்ஜியோ கோர்” என்று பாராட்டினார்.