மாஸ்கோவில் நடைபெற்ற பயணத்தின் போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியா மட்டும் அல்ல, உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா கூட இதையே வலியுறுத்தியிருந்ததாக அவர் நினைவூட்டினார். ஆனால் தற்போது அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யாவில் நடைபெற்ற 26வது ஆணைய கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், சவால்கள் எதுவாக இருந்தாலும் புதுமையான அணுகுமுறையின் மூலம் உறவை மேம்படுத்த வேண்டும் என்றார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் இந்தியா-ரஷ்ய உறவு நம்பகமான சிறப்பு நாடுகளுக்குரியதென பாராட்டினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் உக்ரைன் போருக்கான சர்வதேச சூழல், இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன. இதன் மூலம் இந்தியா-ரஷ்ய உறவு இன்னும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
பயணத்தை நிறைவு செய்யும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், எரிசக்தி ஒத்துழைப்பு இந்தியாவுக்கு முக்கியமானது என்றும், ரஷ்யாவுடன் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடரும் என்றும் தெரிவித்தார். சீனா தான் ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வாங்குபவராக உள்ளதாகவும், இயற்கை எரிவாயுவை அதிகம் பெறுவது ஐரோப்பிய யூனியன் என்றும் குறிப்பிட்டார். உலக சந்தை நிலைத்தன்மைக்காக இந்தியா தனது பங்கினை தொடர்ந்து ஆற்றும் என்றும் அவர் வலியுறுத்தினார்.