ரபாடா: வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில், “ஜென் இசட் எழுச்சி” என்ற பெயரில் இளம் தலைமுறையினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
1990 முதல் 2010 வரையிலான காலத்தில் பிறந்த இளைஞர்கள் தலைமையில் நடைபெறும் இந்த இயக்கம், சமூக சமத்துவமின்மை, அரசின் ஊழல், பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு குறைவு ஆகிய காரணங்களால் எழுந்துள்ளது. தற்போது இளைஞர் வேலைவாய்ப்பு இல்லாமை 35.8% ஆக உயர்ந்திருப்பதும் போராட்டத்தை வேகப்படுத்தியுள்ளது.

பொது மருத்துவமனைகளின் மோசமான நிலை, குறிப்பாக அகாடிர் மருத்துவமனையில் சமீபத்தில் 8 கர்ப்பிணியர்கள் பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் இளைஞர்களை சினமடையச் செய்துள்ளது. “விளையாட்டு அரங்குகள் எங்கே வேண்டுமானாலும், ஆனால் மருத்துவமனைகள் எங்கே?” என்ற முழக்கம் போராட்டத்தின் முக்கிய கோஷமாக மாறியுள்ளது.
ரபாடா, காசாபிளாங்கா, மராகேஷ், அகாடிர், டான்ஜியர் உள்ளிட்ட 15 நகரங்களில் போராட்டங்கள் பரவி வருகின்றன. சில இடங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை சேவைகளை மேம்படுத்தாமல், அரசு விளையாட்டு போட்டிகளுக்காக கோடிக்கணக்கில் செலவழிப்பதை இளைஞர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.