தெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத கண்காணிப்புக் குழு தலைவர் ரபேல் குரோஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்பதையும், அந்த நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுமென்பதையும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.

இந்த ஒப்பந்தம் டொனால்டு டிரம்ப் அதிபராக வந்தபின் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, ஈரான்மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இருந்தாலும், ஈரான் தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கக்கூடிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும், ஈரான் பலமுறை அதனை நிராகரித்து வந்தது. இதன் காரணமாக, டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, ஈரானை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தி மிரட்டல் விடுத்தது.
இந்த சூழலில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சீராக நடந்தாலும், எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 19ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பிற்கு முன்பாகவே, ரபேல் குரோஸி வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். ஒருநாள் அதனை இணைத்துவிடும் அபாயம் இருப்பதாகவும், வாய்மொழியில் அளிக்கப்படும் உத்தரவாதங்களைக் காட்டிலும் சர்வதேச நாடுகள் ஆதாரப்பூர்வமான உறுதிப்பத்திரங்களை விரும்புகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இது தொடர்பாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவித்தார்.