ஈரானின் அணுசக்தி உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட தாக்கத்தை தொடர்புடைய தரப்புகள் இதுவரை மறுத்தும் ஏற்கவும் தவித்துவரும் சூழல் நிலவியது. இஸ்ரேல் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்தும் நோக்கில் தாக்குதல்களை தொடங்கியது. பின்னர், அமெரிக்கா நேரடியாக ஈரானின் போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் அணுசக்தி தளங்களை கடந்த ஜூன் 22ஆம் தேதி தாக்கியது. இதில், பங்கர் பஸ்டர் வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுவரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “அணு உலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன” என அறிவித்திருந்தாலும், ஈரான் அதை திட்டவட்டமாக மறுத்து வந்தது. ஆனால், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், அமெரிக்க தாக்குதலால் அணுசக்தி உலைகள் பாதிக்கப்பட்டது உண்மைதான் என அறிவித்துள்ளார். அதேசமயம், அந்த சேதம் குறித்து முழுமையான விவரங்களை வெளியிட மறுத்தார்.
இருப்பினும், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தாததோடு, யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது மேலும் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்து, பன்னாட்டுக் கூட்டமைப்புகளிடம் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா, சீனா, ரஷ்யா, ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த பரபரப்புக்குப் பிறகு, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் “போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என அறிவித்தார். இது தொடக்கத்தில் ஈரானால் மறுக்கப்பட்டாலும், பின்னர் “அமெரிக்கா கெஞ்சியதால் நாங்கள் ஒத்துக்கொண்டோம்” என்ற வகையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. உலக அரசியல் தருணங்களில் இது முக்கியமான திருப்பமாக கருதப்படுகிறது.