பாரிஸ்: அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமான NPT-இலிருந்து ஈரான் வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார். அணுசக்தி துறையில் ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது ஏற்கெனவே இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றன. கடந்த காலங்களில் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி, ஈரான் அணு ஆயுத வளர்ச்சியை தொடர்ந்ததற்காக அதன் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலால் ஈரானின் மூன்று முக்கிய அணு உற்பத்தி மையங்கள் சேதமடைந்தன. இதனை அடுத்து ஈரான், NPT ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. இதற்குத் தங்களது கடும் எதிர்ப்பை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் வெளியிட்டன. இந்நிலையில், இந்த முடிவை உலக அமைதிக்கு எதிரான மிகப் பெரிய அபாயமாக மேக்ரான் கண்டித்துள்ளார்.
ஐரோப்பா ஒன்றியத்தின் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஒரு புறம், ஆனால் ஈரான் எடுத்துள்ள தீர்மானம், முழுமையாக NPT அமைப்பை பாதிக்கும் வகையில் உள்ளது. இது அமைதிக்கான சாத்தியமான ஒப்பந்தங்களைப் பலவீனப்படுத்தும். எனவே, அணு ஆயுத தயாரிப்பைத் தடுக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்,” என்றார்.
NPT என்பது அணு ஆயுதங்கள் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்ப பரவலை தடுக்க உருவாக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தம். இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது பிரான்ஸ், ஈரானை ஒப்பந்தத்தில் இருந்து விலகாமல் இருக்க வலியுறுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டு, தொடர்ந்து பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.