ஏமனின் தலைநகர் சனாவில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹவுதி படையின் முக்கிய தலைவர்கள் பலியாயினர். ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹவுதி படையினர், ஏமனின் பெரும்பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து தனி ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அவர்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று கடுமையான தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், ஹவுதி படையின் பிரதமர் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட அகமது அல்-ரஹாவி உயிரிழந்தார். மேலும், 10க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டு, 90 பேர் வரை காயமடைந்தனர். தாக்குதலின் தீவிரத்தால், சனா நகரின் பல பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
அதோடு, ஹவுதி படையின் ராணுவ தலைமையகமே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ அமைச்சர் முகமது அல்-அதிபி, தளபதி முகமது அப்துல்-கரீம் அல்-கமாரி உள்ளிட்ட தலைவர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஹவுதி படையின் ராணுவத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் ஏமன்-இஸ்ரேல் உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ளன. ஹவுதி ஆதரவாளர்கள் பழிவாங்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மேற்காசிய பிரதேசத்தில் பதற்ற நிலை தீவிரமடைந்து வருகிறது.