ஜெருசலம்: காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்களது நாட்டைச் சேர்ந்த பிணைக்கைதிகளுக்கான உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நிலவும் போர் காரணமாக 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் புகுந்து தாக்கியதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 250 பேர் பிணைக்கைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர். அதில் சிலர் மீட்கப்பட்டதுடன் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதும் 49 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் தற்போது பிணைக்கைதிகளில் ஒருவரின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், அந்த நபர் மிகவும் சலிக்கப்பட்ட நிலையில் தோன்றுகிறார். மண்வெட்டியுடன் தான் புதையவேண்டிய குழியை வெட்டிக் கொள்ளும் அந்தக் காட்சி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு சித்ரவதை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் செஞ்சிலுவைச் சங்கத்திடம், பிணைக்கைதிகளுக்கு உணவு, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி ஜூலியன் லெரிசனிடம் நேரில் பேசிய நெதன்யாகு, ஹமாஸ் அவர்களுக்கு சந்திப்பதற்கும் உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று செஞ்சிலுவைச் சங்கமும் கோரியுள்ளது. இந்த மனிதாபிமான நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது.