வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான மூன்றாவது சந்திப்பில் கலந்துகொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த சந்திப்பு, ஈரானுடன் இஸ்ரேல் நடத்திய போர் மற்றும் அதன் விளைவுகளுக்குப் பின்னர் நடைபெற்றது. அந்தப் போரில் வெற்றிபெற்ற இஸ்ரேல் அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், டிரம்ப் பிரதமருக்கு சிறப்புவிருந்தும் அளித்தார்.

விருந்தின் போது, காசா பகுதியில் நடைபெற்று வரும் மோதல் குறித்து டிரம்ப், ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தம் கொண்டு வரவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தார். அதனை தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், டிரம்ப் பேச்சுகள் சாதகமாக நடந்து வருவதாக தெரிவித்தார். எனினும், நெதன்யாகு எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்றும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இயலாது என்றும் கடுமையாகத் தெரிவித்தார்.
பாலஸ்தீன மற்றும் ஹமாஸ் அமைப்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன என்றும், அவர்களுக்கு தனிநாடு கிடையாது என்றும் நெதன்யாகு கூறினார். காசா முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாடு தொடரும் என்றும் அவர் உறுதியாகச் சொன்னார். இந்தக் கருத்து, இஸ்ரேலின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அத்துடன், இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்த காரணமாகவும், மேற்கு ஆசியாவில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்ததற்காகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என நெதன்யாகு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரை கடிதத்தை அவர் நேரில் டிரம்பிடம் ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்ட டிரம்ப், “இது மிக அர்த்தமுள்ள பரிசாகும்” எனத் தெரிவித்தார்.