காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் சூழலியலாளர் கிரேட்டா தன்பர்க், தற்போது இஸ்ரேல் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த விமர்சனங்களுக்கிடையே, காசா மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவிகள் சில நாட்களாகவே நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் சில ஆதரவு நடவடிக்கைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. இருந்தாலும் முழுமையான உதவி பணிகள் நடைபெறாத சூழல் தொடர்கிறது.

இந்நிலையில், கிரேட்டா தன்பர்க் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன் உட்பட 12 தன்னார்வலர்களுடன், ‘மாட்லீன்’ என்ற படகில் நிவாரணப் பொருட்கள் ஏற்றிக்கொண்டு காசாவை நோக்கி கடல் வழியாக புறப்பட்டார். இந்த பயணம் ‘சுதந்திர புளோட்டிலா கூட்டணி’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த வாரம் இத்தாலியின் சிசிலி கடற்கரையிலிருந்து இந்த பயணம் தொடங்கப்பட்டது. இன்று அதிகாலை காசா அருகே வந்தபோது, இஸ்ரேலிய கடற்படையினர் அந்தப் படகை வழிமறித்து, அனைவரையும் கைது செய்தனர்.
காசாவின் கடற்பரப்பு முழுமையாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருப்பதால், அந்தப் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிவாரண பொருட்கள் காசாவுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல், கிரேட்டா தன்பர்க் இத்தகைய செயலில் விளம்பர நோக்கத்துடன் ஈடுபட்டதாகவும், அவரும் மற்ற தன்னார்வலர்களும் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான போர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இதுவரை 54,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இந்த போரால் உயிரிழந்துள்ளனர். ஐநா பாதுகாப்பு சபையில் போர்நிறுத்தம் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும், அமெரிக்காவின் வீட்டோவை தொடர்ந்து அமலாக்க முடியாமல் போனது. இதன் விளைவாக, பாலஸ்தீன மக்கள் கடும் பஞ்சம் மற்றும் நிவாரண பற்றாக்குறையில் தவிக்கின்றனர்.
இந்தக் கடுமையான மனிதாபிமான நிலையில்தான் கிரேட்டா தன்பர்க் தனது மனித நேய பணி பயணத்தை மேற்கொண்டார். ஆனால், இஸ்ரேல் அவரை கைது செய்து தடுக்க வேண்டியதாக கருதியுள்ளது. இவரது கைது, சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.