இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தனது மற்றும் சில அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பிகா’ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள், பிரதமர் மெலோனி, அவரது சகோதரி அரியன்னா, எதிர்க்கட்சி தலைவர் எலி ஷ்லீன் உள்ளிட்டோரின் மாண்பை அவமதிக்கும் வகையில் இருந்தன. ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட அந்த தளம், பெரும் விவாதத்துக்குரியதாக மாறியது.

“இந்த மோசமான சம்பவம் மன வேதனை அளிக்கிறது. இதுபோன்ற ஆபாச செயலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என் முழு ஆதரவை தெரிவிக்கிறேன். ஒரு பெண்ணை அவமதிப்பதையும், அவர்களின் மாண்பை மிதிப்பதையும் இயல்பாகக் கருதுவோர் இன்னும் இருப்பது கவலைக்குரியது. இப்படிப்பட்டவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும்,” என மெலோனி உறுதியுடன் தெரிவித்தார்.
சம்பவத்துக்குப் பிறகு, தளம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறி நிர்வாகிகள் தளத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர். ஆனால், இந்தச் செயல் சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி முழுவதும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்லாமல் பல பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவைப்படுவதாகக் கூறி, அத்தகைய தளங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்தச் சம்பவம், இணையத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தனிமையை காக்கும் அவசியத்தை வலியுறுத்தி, புதிய சட்ட நடவடிக்கைகளுக்கான கோரிக்கையை உருவாக்கியுள்ளது.