உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. போரின் முடிவுக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. ரஷ்யா கடந்த சில மாதங்களாக தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, தனது கூட்டாளி நாடுகள் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் கிவ்வின் மேற்கு பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது குழந்தை உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 150 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.
பனிப்போர் கால ஹெல்சிங்கி ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு நினைவு மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, “போரை நிறுத்தும் திறன் ரஷ்யாவிடம் இருக்கிறது. ஆனால், அவர்கள் விருப்பமில்லை. அதனால்தான், கூட்டாளிகள் அரசியல் மாற்றத்திற்கு உறுதியாகச் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இவ்வகை அரசியல் மாற்றம் நடைபெறா விட்டால், ரஷ்யா எதிர்காலத்திலும் அதன் அண்டை நாடுகளை போர்ச் சூழலில் தள்ளும் அபாயம் நிலவுவதாக அவர் எச்சரிக்கிறார். அவரது கூற்றுகள், எதிர்காலத்தில் இந்தப் போர் எவ்வளவு நீடிக்கப் போகிறது என்ற கவலையை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளன.