வாஷிங்டனில், அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இந்தியா மீது விதித்த 50 சதவீத வரி, இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய வணிக, பாதுகாப்பு உறவை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என அவர் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்த வரி விதிக்கப்பட்டது, ஆனால் சீனாவுக்கு அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே இந்தியாவின் ஆவேசத்தைத் தூண்டியுள்ளது.

இந்தியாவின் எதிர்ப்பு, முன்பே எதிர்பார்க்கப்பட்டது போலவே வரி அறிவிக்கப்பட்ட பிறகு வெளிப்பட்டது. சீனாவை விட இந்தியா மீது கடுமையாக அமெரிக்கா நடப்பது, தசாப்தங்களாக மேற்கொண்ட வந்த இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து விலக்கும் முயற்சிகளை பாதிக்கக்கூடியதாக இருக்கும் என போல்டன் தெரிவித்தார். சீனாவுக்கு காட்டப்படும் கருணையும், இந்தியாவுக்கு எதிரான கடுமையான வரிகளும், அமெரிக்க வெளியுறவு கொள்கையில் பெரும் பிழையாக அமைந்துள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதேபோல், அமெரிக்க வெளியுறவு மற்றும் வர்த்தக கொள்கை நிபுணர் கிறிஸ்டோபர் படில்லா கூறுகையில், டிரம்ப்பின் இந்த வரி நடவடிக்கைகள் இருநாட்டு உறவுகளுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா இதை மறக்காது, மற்றும் அமெரிக்கா நம்பகமான கூட்டாளியா என்ற சந்தேகம் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருக்கும் என்றார்.
இந்த சூழலில், ரஷ்ய அதிபர் எதிர்வரும் மாதங்களில் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது இந்தியா-ரஷ்யா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்தியா, தனது வலிமை வாய்ந்த வர்த்தக பங்காளிகளை நம்பி இயங்கும் சூழல் உருவாகும் போதிலும், அமெரிக்கா தவறானத் தீர்வுகளால் அவ்வழியை தானே சீரழித்துக்கொள்கிறது என விமர்சனம் அதிகரிக்கிறது.