இத்தாலி, பெர்கமோ – ஓரியோ அல் செரியோ விமான நிலையத்தில் விமான புறப்பட தயாராக இருந்த தருணத்தில் 35 வயதான ஆண்ட்ரியா ருஸ்ஸோ உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ம் தேதி நடந்த இந்த சம்பவம், விமான நிலையம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ருஸ்ஸோ, வருகை பகுதியைத் தாண்டி, விமான நிறுத்துமிடம் நோக்கி பாதுகாப்பு கதவுகளை மீறி ஓடியதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், ஸ்பெயினுக்குப் புறப்படவிருந்த வோலோடியா விமானம் ஓடுதளத்தில் தயாராக இருந்தது. ருஸ்ஸோ திடீரென விமானம் நோக்கி ஓடியதையடுத்து, விமான நிலைய பணியாளர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அவரைத் தடுக்க முடியாத நிலையில், அவர் நேராக விமானத்தின் இயந்திர இறக்கைக்குள் குதித்தார். உடனே இயந்திரத்தில் சிக்கிய அவர் உயிரிழந்தார். சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தச் சம்பவத்தால் விமான நிலையச் சேவைகள் இரண்டு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டன. முதற்கட்ட தகவலின்படி, காவல்துறையினர் துரத்தியதையடுத்து, ஆண்ட்ரியா ருஸ்ஸோ விரைவாக காரை ஓட்டிச் சென்றதாகவும், பின்னர் விமான நிலையத்தில் ஓடியதாகவும் கூறப்படுகிறது. அவர் மனஅழுத்தத்தால் தற்கொலை முயற்சி செய்தாரா அல்லது ஏதோ வேறு சூழ்நிலை இருந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் விமான நிலையங்களில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மீறப்படுவது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. விமானத்துக்குள் பயணிகளும் பொதுமக்களும் இவ்வளவு சுலபமாக நுழைய முடியுமா என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தச் சூழ்நிலையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டியதாயுள்ளது.