ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார். “அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை,” என்று அவர் கூறினார்.
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கனடா அரசு காலிஸ்தான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்ட கனடா அனுமதிக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஒட்டாவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ட்ரூடோ, “கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோல், கனடாவில் மோடி ஆதரவாளர்கள் உள்ளனர்; அவர்கள் அனைத்து இந்து கனேடியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்றார்.
கனடாவில் காலிஸ்தானி இருப்பதை ட்ரூடோ ஒப்புக்கொண்டது, கனடா அவர்களுக்கு அடைக்கலம் தருகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது.