போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட் மற்றும் டொபேகோ குடியரசின் பிரதமர் கமலா பெர்சாத் ஃபிஷருக்கு பிரதமர் நரேந்திர மோடி கும்பமேளா புனித நீரை பரிசாக வழங்கினார். பிரதமர் மோடி 8 நாட்களில் 5 நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
முதல் கட்டமாக, நேற்று முன்தினம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவை அடைந்தார். நேற்று தனது 2 நாள் கானா பயணத்தை முடித்த பிரதமர் மோடி, இரண்டாவது கட்டமாக நேற்று மாலை டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு புறப்பட்டார். அங்கு, பிரதமர் மோடி பாரம்பரிய வழக்கப்படி வரவேற்கப்பட்டார். அந்நாட்டு பிரதமர் கமலா பெர்சாட் ஃபிஷர் மோடிக்கு வாழை இலையில் விருந்து வைத்தார்.

விருந்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கமலா பெர்சாத்துக்கு அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி, சரயு நதியில் இருந்து புனித நீர் மற்றும் மகா கும்பமேளாவில் இருந்து புனித நீரை பரிசாக வழங்கினார். இந்தப் பரிசுகள் இந்தியாவிற்கும் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக உறவுகளை அடையாளப்படுத்துவதாக பிரதமர் மோடி தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவார். அதன் பிறகு, மூன்றாம் கட்டமாக அர்ஜென்டினா செல்லும் பிரதமர் மோடி, 6 மற்றும் 7-ம் தேதிகளில் பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பார்.