வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தனது போட்டியாளரான அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது.
தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) போட்டியிடுகிறார். கடந்த 27ம் தேதி பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்வு நடந்தது.
டிரம்பின் கேள்விகளுக்கு பைடனால் பதிலளிக்க முடியவில்லை. இதையடுத்து, ஜோ பைடனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த அவரது கட்சி உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர். எனினும் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புளோரிடாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டிரம்ப், மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க தயார் என பைடனுக்கு சவால் விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகத்தின் முன் தன்னை மீட்டுக்கொள்ள ஜோ பைடனுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.
இந்த வாரம் இன்னொரு விவாதம் நடத்துவோம். ஆனால் இந்த நேரத்தில், எங்கள் இருவருக்கும் இடையேயான விவாதம் பார்வையாளர்களோ அல்லது நடுவர்களோ இல்லாமல் நடக்க வேண்டும். எப்போது, எங்கு நடக்க வேண்டும் என்பதை பைடன் தரப்பு தீர்மானிக்கட்டும்.
மேலும், அவருடன் ‘கோல்ப்’ விளையாடவும் தயாராக இருக்கிறேன். பைடன் வெற்றி பெற்றால், அவர் விரும்பும் தொண்டு நிறுவனத்திற்கு $1 மில்லியன் நன்கொடையாக வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.