டோக்கியோ: இதய நோய்களில் இருந்து சிரிப்பு காக்கும் என்கிற ஆய்வின் அடிப்படையில் ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் தினமும் ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் 8-ம் தேதியை சிரிப்பு தினமாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிரிப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். சிரிப்பின் நன்மைகள் குறித்து ஜப்பானின் யமகட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதய நோய் அபாயத்தைக் குறைக்க சிரிப்பு உதவுகிறது என்பதை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியது. அதன்படி, யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய உத்தரவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் 8ம் தேதியை சிரிப்பு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் சிரிப்பது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் அங்குள்ள சில அரசியல்வாதிகள் இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாகவும், நோய் அல்லது பிற காரணங்களால் புன்னகைக்க முடியாதவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் விமர்சித்துள்ளனர்.